உமாபதி


உங்களைப்பற்றி...


நான் பெருங்களத்தூர் பகுதியில் 51 வருடங்களாக வசித்து வருகிறேன். இங்குள்ள சூழல்களுடனும், மக்களுடனும் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பெருங்களத்தூரின் பழைய நினைவுகள் அடிக்கடி வந்து செல்லும். என் குடும்ப நிகழ்வுகளும், நினைவுகளும் இதில் அடங்கும். என் மனைவி பெயர் வள்ளி, எனக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அருண்குமார், இரண்டாவது மகன் நட்ராஜ், மூன்றாவது மகன் கமல். மூவருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.


முதன் முதலில் தொடங்கிய தொழில் என்ன?


1985ம் ஆண்டு இந்திரா டிரேடர்ஸ் துவக்கி டிவி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தேன். 1989ம் ஆண்டு இந்திரா வீடியோ மற்றும் ஆடியோ சென்டர் துவங்கிய காலகட்டத்தில் டிவி என்பதே ஒரு தெருவில் ஒரு வீட்டில் தான் இருக்கும். டெக் மற்றும் கேசட் வாங்கி சென்று குடும்பத்துடன் படத்தை பார்க்கும்போது ஒரு தனி மகிழ்ச்சியாக உள்ளது என்று வாடிக்கையாளர் கூறும்போது நமக்கும் இத்தொழில் செய்வதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். இத்தொழில் ஒரு காலகட்டத்தில் நலிவடைந்த நேரத்தில் 1995ம் ஆண்டு சன் பைனாஸ் தொடங்கினேன். 2018ம் ஆண்டு இந்திரா ரெடிமேட்ஸ் துவங்கி இயங்கி வருகிறேன். என் தாயார் பெயர் இந்திரா. அவரின் பெயரே தொழிலின் பெயராக வைத்துள்ளேன்.


உங்கள் அரசியல் ஈர்ப்பாளர்கள் யார்?


காமராஜர் அவர்களும், எம்.ஜி.ஆர் அவர்களும்  மக்களுக்கு செய்த  நல்லதையும், மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் தான் என்னை அரசியலில் ஈடுபட தூண்டியது. அதாவது நாம் வசிக்கும் பெருங்களத்தூர் பகுதிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐயா ஜி.கே.மூப்பனார் தலைமையில் த.மா.கா வில் இணைந்தேன். அவரின் மறைவுக்கு பிறகு தலைவர் ஜி.கே.வாசன் வழி நடந்து கொண்டு இருக்கிறேன்.


பீர்க்கன்காரணை பேரூராட்சியில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன?



  1. பீர்க்கன்காரணையில் சமுதாயக்கூடம் இல்லை. அதைக்கொண்டு வர முயற்சி செய்வேன்.

  2. மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான ஒரு பூங்கா அமைக்க பாடுபடுவேன்.

  3. அனுராக்கார்டன் வழியாக மக்கள் பயன்பாட்டிற்கு தேசிய நெடுஞ்சாலையில் (மதுரவாயல் பைபாஸ்) இணைக்க நடவடிக்கை எடுப்பேன்.

  4. பீர்கன்காரணை பேரூராட்சி மேல்நிலைப்பபள்ளி தரத்தை மேலும் உயர்த்த பாடுபடுவேன்.

  5. திடக்கழிவு மேலாண்மையில் உள்ள கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், யாரும் தீயிட்டு எரிக்காதபடி பார்த்து கொள்ள ஏற்பாடு செய்வேன்.

  6. பெருங்களத்தூர் மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க முயற்சிகள் மேற்கொள்வேன்.

  7. பீர்க்கன்காரணை பகுதி பேருந்து நிலையத்தில் பேருந்து பயண நிழற்கொடை அமைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பேன்.


     8. இரயில்வே கேட் அருகில் இருக்கும் மதுபான கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பாடுபடுவேன்.